Saturday, 17 March 2012

ஜமாத் தேர்தல்! வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டது


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

 

 

 


பல வருடங்களாக நிர்வாகமே தேர்ந்தெடுக்கப்படாத நமதூரில் இன்ஷா அல்லாஹ் விரைவில் இரகசிய ஒட்டெடுப்பு முறையில் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறது. கடந்த 23.02.2012 நமதூருக்கு வக்பு வாரிய அதிகாரி வந்ததையும், அரசு அதிகாரியிடமிருந்து வாக்காளர்பட்டியல் பெற்று சென்றதை நாம் வெளியிட்டிருந்தோம் (http://www.nidurneivasal.org/2012/02/blog-post_26.html

அதன் தொடர்ச்சியாக சென்ற 16.03.2012 அன்று மறுபடியும் வக்பு வாரிய அதிகாரிகள் நமதூருக்கு வருகைத்தந்து வாக்காளர் பட்டியலை பெரிய பள்ளிவாசல் தகவல் பலகையில் ஒட்டிச்சென்றுள்ளார்கள். ஜமாத் உறுப்பினராக இருந்து பதினெட்டு வயது பூர்த்தி செய்த அனைவரும் ஒட்டளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாக பெயர் சேர்ப்பதற்கான படிவத்தினையும் கொடுத்துச்சென்றுள்ளார்கள். ஜமாத்தார்கள் அனைவரும் தயவு கூர்ந்து அதில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை சரிபார்த்துக்கொள்ளவும். ஒருவேளை தங்களது பெயர் அந்த பட்டியலில் இல்லையென்றால் வருகிற 31.03.2012 ஆம் தேதிக்குள் தங்களது பெயரை சேர்ப்பதற்கான படிவத்தினை சமர்பித்துவிடவும். அதற்கான படிவமும் பள்ளிவாசலிலேயே கிடைக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நிர்வாகமே இல்லாதிருந்த நமதூருக்கு இன்ஷா அல்லாஹ் ஜமாத்தார்கள் விரும்பக்கூடிய புதியதொரு நிர்வாகம் வரவிருக்கிறது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் ஜமாத்தார்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஊரின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் அக்கறைக்கொண்ட நீதியான நியாயமான புதிய நிர்வாகத்தினை தேர்வுசெய்வோம். முடங்கி கிடக்கும் நமதூரின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை மீட்டெடுப்போம். உண்மையின் பக்கம் என்றும் அல்லாஹ் துணை நிற்பான்.

புகைப்படம்: நீடூர்நெட்.காம்

Wednesday, 14 March 2012

முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்புப்பரிசு!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 


நமதூரின் முன்னேற்றத்திற்காகவும், நமது இஸ்லாமிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் நமது துபாய் சங்கமானது பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளையும், சேவைகளையும் செய்துவருவதை அனைவரும் நன்கு அறிவோம். அதில் ஒரு பகுதியாக சுமார் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்டிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவச்செல்வங்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கிவரும் சேவையின் அடுத்த கட்டமாக சென்ற ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் நமதூரைச்சார்ந்த இஸ்லாமிய மாணவச்செல்வங்களுக்கு சிறப்பு பரிசுகள் பரிசினை வழங்கினோம்.


அதன் தொடர்ச்சியாக இன்ஷா அல்லாஹ் தற்போதைய கல்வி ஆண்டின் (2011 - 2012) இறுதித்தேர்வில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் மூன்றாயிரமோ அல்லது அதற்கு இணையான பரிசுபொருட்களோ, இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரமு மோ அல்லது அதற்கு இணையான பரிசுபொருட்களோ வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர் / மாணவிகள் அதற்கான மதிப்பெண் பட்டியலை எமது நிர்வாகிகளிடம் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இமெயில்: nidurneivasal@gmail.com


நமது சங்கத்தின் உறுப்பினர்களும், நமதூரைச்சார்ந்த இதர சகோதரர்களும் இச்செய்தியினை மற்றவர்களுக்கும் தெரிவித்தார்களேயானால் மிக பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு அனைத்து மாணவச்செல்வங்களும் சிறப்பான முறையில் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

Saturday, 10 March 2012

சங்கத்திற்கு புதிய நிர்வாகம் குறித்து அடுத்தமாதம் ஆலோசனை நடைப்பெறுகிறது!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 


கடந்த 09.03.2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நமது சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. ஆலோசனைக்கூட்டத்தின் கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் நமதூரில் நடைப்பெற வேண்டிய நிர்வாகத்தேர்தல், வரவிருக்கின்ற கல்வி ஆண்டில் மாணவ / மாணவிகளுக்கு வழங்கவேண்டிய இலவச நோட்டு புத்தகங்கள், தற்போதைய கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் நமதூரைச்சார்ந்த மாணவ / மாணவிகளுக்கு பரிசு வழங்குவது மற்றும் நமது துபாய் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேந்தெடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

விவாதிக்கப்பட்ட முடிவுகளின் படி இன்ஷா அல்லாஹ் நமது சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை விரைவில் தேர்ந்தெடுப்பது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாக இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதாந்திர கூட்டத்தில் (13.04.2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு) அதற்கான தேதி உட்பட மற்ற  விஷயங்களும் விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமின்றி சங்கத்தின் செல்பாட்டிலும், ஊரின் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்ட நமதூரைச்சார்ந்த அனைத்து சகோதரர்களும் முயற்சி மேற்கொண்டு தவறாமல் கலந்துக்கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்போடு கேட்டுக்க்கொள்ளப்படுகிறார்கள்

தமது சொந்த வேளைகளினால் சங்க கூட்டத்திற்கு வரமுடியாதவர்களும்  அல்லது மாற்று கருத்துகளினால் யாரேனும் சங்கத்தின் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருப்பார்களேயானால் அந்த சகோதரர்களும் தவறாமல் கலந்துக்கொண்டு தத்தமது கருத்துகளை பதிவு செய்யுமாறும் அன்போடு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்

நமது ஊரில் மற்றும் நமது சமுதாயத்தில் மருத்துவம், கல்வி, வீட்டுவசதி, திருமணம் போன்ற விஷயங்களில் எவ்வளவோ தேவைகள் இருந்தும் அதற்காக நாம் உதவிகள் செய்வதோ மிகவும் சொற்பமாகவே இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் நமதூரைச்சார்ந்த சகோதரர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பொருத்தத்தை எதிர்ப்பார்த்தும், பொருமையைக்கொண்டும் ஒன்றுப்பட்டு நமது ஊரின் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றதில் தம்மால் இயன்ற பங்களிப்பினை செய்வதற்கு அனைவரும் முயற்சிசெய்வோம். இன்ஷா அல்லாஹ் மறுமையில் எல்லாம் வல்ல அல்லாஹ்விர்டமிருந்து நிரந்தர கூலியினை பெறுவோம்.

அடுத்த மாதாந்திர கூட்டம் நாள்:

13.04.2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு

கூட்டம் நடைப்பெறும் இடம்: 

சபியா தெரு முஹம்மது நிஜார் அவர்களின் தங்குமிடம், பராஹா பகுதி,(Baraha), ஈத்கா மைதானம் அருகில்

Monday, 5 March 2012

கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்!



கல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்! - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம்.

தனது பிள்ளையை கிருஸ்ணனாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது!. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது!!.

இது போன்று அந்தத் தாய் செய்வதற்கு மார்க்கத்தைப் பற்றிய அறியாமை என்று கூறிவிட முடியாது. ஏனெனில், மார்க்கத்தை அவர் தெளிவாக அறிந்திருப்பதால்தான் முழுமையான பர்தாவை கடைபிடித்திருக்கிறார். அப்படியிருந்தும் இத்தகைய செயலை அவர் செய்ததற்கு காரணம், இவைகளை சாதாரணமாக கருதி, குழந்தையை நரக படுகுழியில் தள்ள முற்பட்டுள்ளார்.

சமுதாய மக்களே!, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு கடவுள் இல்லை என்று நாவால் மொழிந்த இக்குழந்தை, அல்லாஹ்விற்கு இனையுண்டு என கடவுளின் அவதாரம் பூண்டிருக்கின்றது இக்குழந்தையின் உடல்!. கொஞ்சம்கூட மனம் கூசவில்லையா?. பாரதி, வள்ளுவன், புலி, கரடி என வேஷம் போட்டதின் பரிணாம வளர்ச்சிதான் இப்படி நிறுத்தியிருக்கின்றது தற்போது!

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் ஒரு கேள்வியை நாம் முன்வைக்கின்றோம்!. எந்தக்குழந்தையும் அல்லது எந்த ஒரு முஸ்லிமும் இந்த வேஷம் பூண்ட நிலையிலேயே எதோ ஒரு காரணத்தினால் மரணித்துவிட்டால் மறுமையில் வல்ல அல்லாஹ்விடம் வரும்போது இதே வேஷத்துடன்தானே எழுப்பப்படுவீர்கள்! அப்போது உங்களின் நிலை என்ன?.

Sunday, 4 March 2012

ஹிஜ்ரி 1433 (2012) ஆண்டில் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்வதற்கான விண்ணப்பம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 

ஹிஜ்ரி 1433 (2012) ஆண்டில் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் செல்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை Click here to Download Haj Committee Application இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம். அதற்கான விதிமுறைகளும் அந்த படிவத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது

விதிமுறைகளில் சில...... தங்களின் பார்வைக்கு:

  1. ஒரு படிவத்தில்  அதிகபட்சமாக மூன்று நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் மற்றோரு விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
  2. விண்ணங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்
  3. விண்ணப்பமானது இரண்டாக இருக்க வேண்டும் (இரண்டு விண்ணங்கள்). ஒரு காப்பி மத்திய ஹஜ் கமிட்டிக்கும் (Haj Committee of India) மற்றொன்று மாநில ஹஜ் கமிட்டிக்கும் (State Haj Committee) உரித்தானது
  4. பெயர் மற்றும் இதர தகவல்கள் பாஸ்போர்டில் இருப்பது போன்று இருக்க வேண்டும். வெள்ளைநிற பின்புலம் (White Background) கொண்டு, 3.50 CM x 3.50 CM அளவு கொண்டு புதிதாக எடுக்கபட்ட புகைப்படம் இரண்டு விண்ணப்பத்திலும் ஒட்டப்படவேண்டும். ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா (State Bank of India) வங்கியில்  ரூபாய் 200 (திருப்பதர இயலாது - Non Refundable) ஹஜ் கமிட்டி ஆப் இந்தியா, கணக்கு எண் 32175017712 (Haj Committee of India - Account No. 32175017712) என்ற கணக்கில் செலுத்த வேண்டும். செலுத்திய பின் பின்க் வண்ணம்  (Pink Colour) கொண்ட நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  5. பாஸ்போர்ட் நகலை இணைக்க வேண்டும் பாஸ்போர்ட்டின் ஆயுள்  (Validity) குறைந்தது 31.03.2013 வரை இருக்க வேண்டும். நகலில் விண்ணப்பத்தார் கையெழுத்திட்டிருக்க வேண்டும்
  6. குடும்ப அட்டை போன்ற முகவரிக்கான நகல் இணைக்கப்பட வேண்டும்
  7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரடியாக மத்திய ஹஜ் கமிட்டிக்கு (Haj Committee of India, Mumbai) சமர்பிக்கக் கூடாது. அப்படி சமர்பிக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் 16.04.2012 க்குள் அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் சமர்பிக்கபட வேண்டும். 
  9. இந்த விண்ணப்பத்தினை மாநில அல்லது யுனியன் பிரதேச ஹஜ் கமிட்டி அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது  www.hajcommittee.com/application_form என்று இணையத்திலிருந்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்

நினைவில் கொள்ள சில தேதிகள்:

16.04.2012:

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தினையும், ரூபாய் 200 செலுத்தியதற்கான ரசீதினையும் சமர்பிக்கவேண்டிய கடைசி தேதி

11.06.2012:

பாஸ்போர்ட்டினையும் மற்றும் ரூபாய் 51,000 செலுத்தியதற்கான ரசீதுயினையும் சமர்பிக்கவேண்டிய கடைசி தேதி (தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மட்டும்)


19.07.2012:

ஹஜ்க்காண மீதமுள்ள தொகையையும் விமான கட்டண தொகையையும் செலுத்தவேண்டிய கடைசி தேதி (தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மட்டும்). 


குலுக்கலில் முன்னுரிமை:

  1. எழுபது வயதினை கடந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  (29.02.2012 ஆம் தேதி விண்ணப்பத்தாரர் 70 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்). அவர்களுடன் (துணையாக) ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் (அவர் நேரடி தொடர்பாக இருகக் வேண்டும். கணவன்/மனைவி, மகன்/மகள், சகோதரர்/சகோதரி மற்றும் மருமகன்/மருமகள் ஆகியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 70 வயதினை கடந்தவர்கள் தனியாக செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  2. கடந்த மூன்று வருடங்களாக விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுகு இரண்டாம் முன்னிரிமை கொடுக்கப்படும் (2009,2010 & 2011). இந்த மூன்று வருடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டும் சொந்த காரணங்களுக்காக செல்லமுடியாதவர்களுக்கு இந்த முன்னுரிமை பொருந்தாது.

மேற்கூரிய விதிமுறைகள் மட்டுமின்றி இன்னும் சில விதிமுறைகளும் இருக்கின்றன. விண்ணப்த்தினை நன்கு படித்து பார்த்து பூர்த்தி செய்து விரைவாக சமர்பிப்போம். இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியர்களாகிய நாம் ஓவ்வொருவரும் ஹஜ் என்ற உன்னதமான கடமையினையும் இனிதே நிறைவேற்ற தூஆ செய்வோம்.

Sunday, 26 February 2012

இரகசிய வாக்கெடுப்பின் முதல்படி! வக்பு வாரிய அதிகாரி வருகை! வாக்காளர் பட்டியல் பெற்றுச்சென்றார்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... 

கடந்த மூன்று வருடங்களாக நமதூருக்கு புதிய நிர்வாகமே தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அவளமான சூழ்நிலையே காணப்படுவதை அனைவரும் நன்கு அறிவோம். தேர்ந்தெடுக்கபடாமலேயே பதவியில் நீடிக்கும் பழைய நிர்வாகம் பதவி விலகக்கோரி கண்ட ஆர்பாட்ட முயற்சிகள், தாசில்தார் முன்னிலையில் இரண்டு அமைதி உடன்படிக்கைகள், ஜமாத்தார்களுக்கிடையே பிளவுகள், மனக்கசப்புகள், ஒரு தரப்பினர் மற்றோர் தரப்பினர் மீது காவல்துறையில் புகார் நடவடிக்கை என்று விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாகிப்போன நமதூரின் குழப்பமான சூழ்நிலைக்கு இன்ஷா அல்லாஹ் விரைவில் நல்லதொரு முடிவு வரவிருப்பது போன்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.

தனிமனித விரோதங்களையும், தனிமனித அதிகாரங்களும் இல்லாமல் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பு முறையே சிறந்தது என்று உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் ஜமாத்தார்கள் பெரும்வாரியாக ஆதரவு தெரிவித்ததையும், அதற்கு மாற்றமாக தனிமனித விரோதங்களுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும், கூச்சல் குழப்பங்களுக்கும் வழிவகுக்கும் கோரஸ் முறையிலேயே புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று மற்றோர் தரப்பாரும் கூறிவந்ததையும் அனைவரும் நன்கு அறிவோம். 

நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் புதிய நிர்வாக தேர்ந்தெடுக்க இயலாது என்று கூறி காலம் தாழ்த்தியது போக, எந்த முறையில் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற மற்றொரு காரணத்தினாலும் நிர்வாகத்தேர்வு மேலும் மேலும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. உடனடியாக புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கபட வேண்டும் என்று தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதின் தொடர்ச்சியாகவும், வக்பு வாரிய நிர்வாகிகளின் முடிவுகளின் தொடர்ச்சியாகவும், கடந்த 23.02.2012 அன்று நமதூருக்கு தஞ்சாவூர் கோட்ட வக்பு வாரிய அதிகாரி வந்து சென்றுள்ளார். தற்காலிக நிர்வாகியையும் மற்ற ஜமாத்தார்களின் கருத்துகளையும் கேட்டுச்சென்றுள்ளார். இரகசிய வாக்கெடுப்பின் முதற்கட்டமாக தாசில்தார் அலுவலகத்திலிருந்து வாக்காளர் பட்டியலை பெற்றுச்சென்றுள்ளார். வாக்காளர் பட்டியல் சரிபார்த்த பிறகு இன்ஷா அல்லாஹ் ஓரிரு வாரங்களில் வாக்காளர் பட்டியல் ஊரில் ஒட்டபடும் என்றும், அதற்கு பின்பு பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகள் முடிந்தபிறகு தேர்தல் தேதி அறிவிக்கபடும் என்று வக்பு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படி வாக்காளர் பட்டியல் ஒட்டப்படும் பட்சத்தில் ஜமாத்தார்கள் தவறாமல், காலம் தாழ்த்தாமல் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளவும்

இன்ஷா அல்லாஹ் விரைவில் நீதியான, நேர்மையான, அல்லாஹ்விற்கு அஞ்சிய நல்லதொரு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வளர்ச்சியிலும், ஒற்றுமையிலும் முடங்கிக்கிடக்கும் நமதூரினை மென்மேலும் மேம்படுத்துவோம். என்றும் அல்லாஹ் துணை நிற்பானாக!

Wednesday, 15 February 2012

I.A.S., I.P.S. தேர்வு தேதி அறிவிப்பு!





இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (INDIAN ADMINISTRATION SERVICE) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.


சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். UPSC யின் http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்துஅனுப்ப வேண்டும்.


பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக்கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும்.




விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி: 05/03/2012


தேர்வு நடைபெறும் தேதி : 20/05/2012 இன்ஷா அல்லாஹ்



சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்:

சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை: 

ஜாமிஆ மதரஸாவின் பட்டமளிப்பு விழா முன் அழைப்பு!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)



நமதூரின் ஜாமிஆ மிஸ்பாஹுல் அரபிக்கல்லூரியின் நிர்வாகத்தினரின் சார்பாக வரவிருக்கின்ற மதரஸாவின் நூற்றாண்டை முன்னிட்டு நமது இணையத்தில் வெளியிட கோரிய ஒரு கடிதத்தின் நகல் அனைவரின் பாரிவைக்காக இணைக்கப்பட்டுள்ளது. பட்டளிப்பு விழாவின் அழைப்பிதழை அனுப்புவதற்கு வசதியாக நமதூரின் மதரஸாவில் பட்டம் பெற்ற ஹாபிழ்களும், ஆலிம்களும் தங்களின் முழு முகவரிகளை மதரஸாவிற்கு அனுப்பிவைக்குமாறு மதரஸாவின் நிர்வாகத்தினரால் அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்புக்கொள்ளவேண்டிய தொலைப்பேசி எண்:

04364 - 250173
91 9488550911
91 7598612452

Sunday, 12 February 2012

பொய் சாட்சி கூறுவது மார்க்கத்தை விலை பேசியது போன்றாகும்



‘சாட்சி கூறுவதை மறைக்காதீர்கள். சாட்சிய மறைப்பவர் அவரின் உள்ளத்திற்கு பாவம் செய்தவர் ஆவார்’ (அல்குர்ஆன்)

சாட்சியை மறைப்பதையே இறைவன் எச்சரித்துள்ளான் எனும்பொழுது ‘பொய் சாட்சி’ கூறுவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை எண்ணிப்பாருங்கள். உலக ஆதாயத்தை அடைய பொய் சாட்சி கூறுபவன் மறுமை நாளில் நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி, அரசனுக்கெல்லாம் அரசனான அல்லாஹ்விற்கு முன் என்ன பதில் சொல்வான்? அவனின் அனைத்து செயல்களையும் நாவும் மற்ற உறுப்புக்களும் சாட்சிக்கூறும் அந்த நிலையை எண்ணிப்பாருங்கள்.

‘பொய்சாட்சி கூறுபவனின் பாதம் (மறுமையில்) நிற்கும் இடத்தை விட்டும் நகராது. இறைவன் அவனுக்கு நரகத்தை கடமையாக்கும்வரை’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அருமைத் தோழர்களுக்கு அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் ‘பாவங்களில் மிகப்பெரியதை அறிவிக்கட்டுமா?’ என்றார்கள். அருமைத்தோழர்கள் ‘கூறுங்கள்’ என்றனர்.

‘இறைவனுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு மாறு செய்தல்’ என்று கூறியபின் சாய்ந்து அமர்ந்தவர்களாக ‘அறிந்துகொள்! பொய்சாட்சி, பொய்சாட்சி, பொய்சாட்சி’ என்று கூறிக்கொண்டே இருந்தனர் நாங்கள் ‘போதும், போதும்’ என்று கூறும்வரை.

பொய் சாட்சி:

பொய் சாட்சி கூறுபவன் வழிகெட்டவனாகவும், வழி கெடுக்கக் கூடியவனாகவும், பொய்யனாகவும், தீங்கு இழைப்பவனாகவும் இருக்கின்றான்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் ஸுப்ஹு தொழுகையை நிறைவு செய்த பின் எழுந்து நின்றவர்களாக ‘பொய் சாட்சி இறைவனுக்கு இணை வைப்பதற்குச் சமம்’ என மூன்று தடவை கூறியபின் கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

‘விக்கிரக ஆராதணையின் அசுத்தத்திலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். பொய்யான வார்த்தைகளிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விற்கு எதையும் இணை வைக்காது அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து வழிபட்டுவிடுங்கள்’ (அல்குர்ஆன்)

மனித சமுதாயத்திற்கு வழி காட்டவே தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அத்தூதர்கள் கண்ணியமாக வாழும் வழியினை மக்களுக்குக் கற்றுத் தந்தனர். எல்லா மக்களின் கடமைகளையும் முறையாக நிறைவு செய்து அமைதியாக வாழும் வழியினையும் கற்றுத் தந்தனர். உலகில் நீதியை நிலைபெறச் செய்தனர். இறைவன் மக்களுக்கிடையே தீர்ப்புக் கூறுவதை கடமையாக்கியுள்ளான். நீதமான தீர்ப்பின் மூலமே பகைமைகள் நீங்கவும், கடமைகள் பாதுகாக்கப்படவும் மக்களின் மத்தியில் அமைதியை நிஇபெறச் செய்யவும் முடியும்.

Saturday, 11 February 2012

இஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு



இஸ்லாத்தினை அறிந்துக்கொள்ள ஒரு மாதிரி கடிதம்

அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக…ஆமீன்.

இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம்.

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (MOSES) (அலை), ஈசா (JESUS) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான்.

இஸ்லாம் கூறும் செய்தி:

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது.

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை — குரான் (112:1-4)

இந்த பிரபஞ்சத்தை, அதனுள் உள்ள நம்மை என்று அனைத்தையும் படைத்த இறைவனை மட்டுமே வழிபடுமாறும், அவனால் படைக்கப்பட்ட சக உயிரினங்களையோ அல்லது உயிரற்றவையையோ வழிபடுவதை விட்டொழிக்குமாறும் அறிவுறுத்துகின்றது இஸ்லாம்.

படைத்தவனை மட்டுமே வணங்குங்கள், அவனால் படைக்கப்பட்டவையை வணங்காதீர்கள் என்பது தான் இஸ்லாம் உலக மக்களுக்கு கூறும் செய்தி.

குர் ஆன்:

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குர் ஆன்.

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது.

Wednesday, 1 February 2012

வாங்க...பிரம்மிக்கலாம் + கற்றுக்கலாம்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... ஆமீன்.

மனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை. மனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 

1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை (1.4 Kg) என்றாலும், நாம் சுவாசிக்கும் பிராணவாயுவில் 20%-தை மூளையே எடுத்துக்கொள்கின்றது. அதாவது, ஐந்தில் ஒரு பகுதி பிராணவாயுவை மூளையே பயன்படுத்திக்கொள்கின்றது. சுமார் 4 - 6 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் இருக்க முடியும்.

2. அதுபோல, இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தில் 15 - 20 % நேரடியாக மூளைக்கு செல்கின்றது. 

3. மனித மண்டை ஓட்டை திறந்து மூளையை எடுத்தால், நம் கண்களும் அதனோடு சேர்ந்து வந்துவிடும். ஒரு கணிப்பொறியில் கீபோர்ட் இணைந்திருப்பது போல மூளையுடன் நேரடியாக இணைந்திருக்கின்றன நம் கண்கள். ஆனால் மற்ற புலன்களுக்கு இம்மாதிரியாக நேரடி இணைப்புகள் கிடையாது.   

4. மனித மூளை சுமார் 10 வாட் சக்தியை உற்பத்தி செய்கின்றது. இது, ஒரு சிறிய அளவிலான மின் விளக்கை எரிய வைக்க போதுமானது. (அதனாலும் தான் மனித மூளையில் பல்ப் எரிவது போல காட்டுகின்றார்களோ :) 

5. உடலின் மற்ற பகுதிகளின் வலியை மூளை உணர்ந்தாலும் தன்னுடைய வலியை அதனால் உணர முடியாது. இதற்கு காரணம், வலி உணரும் உணர்விகள் மூளைக்கு கிடையாது. இந்த காரணத்தினால், மனிதன் முழு நினைவோடு இருக்கும்போதே மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த காரணத்தினாலேயே தலைவலி பிரச்சனைகளை மூளையோடு தொடர்புபடுத்த முடியாது. மூளையை சுற்றி இருக்கும் நரம்புகளின் அழுத்தத்தாலும், இரத்த நாளங்களின் அழுத்தத்தாலுமே வலி ஏற்படுகின்றது. 

6. மனித மூளையில் 80% தண்ணீரே உள்ளது. நீர் வறட்சி மூளையை பாதிப்புக்குள்ளாக்கலாம். ஆகையால், நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாகும். தொடர்ச்சியான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டிருப்பது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும். 

7. மூளையிலிருந்து வெளிவரும்/உள்வரும் நரம்பு சமிக்கைகள், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 170 மைல்கள் வேகத்தில் பயணிக்கின்றன. இதனாலேயே நம்மால் எந்தவொரு உணர்வையும் உடனடியாக உணர முடிகின்றது. 

8. மூலையில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் மட்டும் சுமார் ஒரு லட்சம் மைல்கள். 

9. சுமார் நூறு பில்லியன் நியுரான்கள் மூளையில் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொள்வதில்லை (Physically).

10. நியுரான்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புக்கொள்வதை மந்தமாக்குகின்றது மதுப்பழக்கம். (இருப்பினும் டாஸ்மாக் நடத்துவதை அரசாங்கம் கைவிடபோவதில்லை. மதுவை எதிர்க்காத பலருக்கு, தமிழன் முன்னேறவில்லை(?) என்ற ஆதங்கம் மட்டும் இருக்கும்). 

11. கருவுறலின் போது, நிமிடத்திற்கு 2,50,000 நியுரான்கள் என்ற கணக்கில் மூளை வளர்ச்சியடைகின்றது. குழந்தை பிறந்த ஒரு வருடத்தில், அதன் மூளை அளவு மூன்று மடங்கு பெரிதாகி விடுகின்றது. (குழந்தைகளின் தலை பெரிதாக இருக்கின்றது என்பது இயல்பான விசயமே!!) 

12. ஒரு மனித மூளையில் உள்ள நிலைமாற்றிகளின் (Switches) எண்ணிக்கை, இவ்வுலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகள், வழிச்செயளிகள் (Routers) மற்றும் இணைய இணைப்புகளில் உள்ள நிலைமாற்றிகளை விடவும் அதிகம். 

இறைவன் அமைத்துக்கொடுத்துள்ள இந்த மிக அற்புதமான அமைப்பை நல்ல முறையில் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம். 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 
      
வஸ்ஸலாம்,

-- ஆஷிக் அஹமத் அ

Sunday, 29 January 2012

அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா!


recruitment-show-tawdheef-2012


தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.

ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.

உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்பை நோக்கமாக கொண்டு இவ்வேலை வாய்ப்பு விழா நடத்தப்பட்டாலும் மூன்றாவது நாள் (பிப்ரவரி - 2) அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வேலைத் தேடுவோர் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

ஜனவரி 31-ஆம் தேதி காலை 11 முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டினருக்கு (U.A.E.) மட்டுமே அனுமதி.

பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 மணி வரை உள்நாட்டு (U.A.E) பெண்களுக்கு மட்டும்.

மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை உள்நாட்டு (U.A.E) ஆண்களுக்கு மட்டும்.

பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வேலை வாய்ப்பு விழாவில் பங்கேற்க விரும்புவர்கள்  www.tawdheef.ae  என்ற இணையதளத்திற்கு சென்று முன்னரே பதிவுச் செய்துக்கொள்ளவும்.

இந்த வேலைவாய்ப்பு விழாவில் பங்கேற்கும் முக்கிய நிறுவனங்கள்: 

அபுதாபி ஏர்போர்ட்ஸ் கம்பெனி, 
அபுதாபி கமர்ஸியல் வங்கி, 
அபுதாபி நேசனல் இன்சூரன்ஸ் கம்பெனி, 
அபுதாபி நேசனல் ஹோட்டல்ஸ், 
அபுதாபி போலீஸ், 
அபுதாபி இன்வெஸ்ட்மெண்ட் அதாரிட்டி,
அபுதாபி இஸ்லாமிக் வங்கி, 
அபுதாபி டூரிஸம் அதாரிட்டி, 
கமர்ஸியல் பேங்க் ஆஃப் இண்டர்நேசனல், 
டால்பின் எனர்ஜி, 
எமிரேட்ஸ் நியூக்ளியர் எனர்ஜி கார்ப்பரேசன், 
எமிரேட்ஸ் அலுமினியம், 
எமிரேட்ஸ் ட்ரைவிங் கம்பெனி, 
இத்திஹாத் (ETHIHAD), 
எடிசலாத்(ETISALAT), 
ஃபர்ஸ்ட் கல்ஃப் வங்கி (First Gulf Bank), 
ஜெனரல் ஹோல்டிங் கார்ப்பரேசன், 
HSBC வங்கி,
முபாதலா, 
நேசனல் பேங்க் ஆஃப் அபுதாபி,
பெட்ரோஃபாக் எமிரேட்ஸ், 
பிரசிடன்ஸியல் கார்ட், 
யு.ஏ.இ எக்ஸ்சேஞ்ச், 
யாஸ் மரினா சர்க்யூட் 

ஆகியன இவ் வேலைவாய்ப்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இதுவரை அறிவித்துள்ளன. மேலும் கூடுதல் நிறுவனங்கள் இவ்விழாவில் பங்கேற்கும்.

நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வேலை தொடர்பாக விசாரிக்கலாம். பயோடேட்டா தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படும். வேலைவாய்ப்பு விழாவையொட்டி பல்வேறு நிறுவனங்களின் மனித வளத்துறைகள் நடத்தும் செமினார்களில் இலவசமாக கலந்துக் கொள்ளலாம்.

உள்நாட்டினருக்கு(யு.ஏ.இ) மட்டும் தனியாக இண்டர்வியூ அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான உள்நாட்டினருக்கு வேலை வழங்குவோம் என பிரபல வங்கிகள் அறிவித்துள்ளன. எமிரேட்ஸ் என்.பி.டி இவ்வாண்டு குறைந்தது 250 உள்நாட்டினரை பணியில் அமர்த்தும். கடந்த ஆண்டு 462 பேரை நியமித்தது.

Thursday, 19 January 2012

சிறு பங்களிப்பு! (இன்ஷா அல்லாஹ்) பெரும் பலன்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நம் சங்க உறுப்பினர்களின் புகைப்படம்.  அன்று இருந்த ஒற்றுமை இன்று இல்லை! அன்று இருந்த எண்ணிக்கை இன்று இல்லை!







இன்றைய காலகட்டம் மட்டுமின்றி என்றும் எப்பொழுதும் முஸ்லிம்களுக்கும்கிடையில் முக்கியத்தேவை ஒற்றுமை, சகோதரத்துவம். தான் விரும்பியதையே தன்னுடைய சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்றும், ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் உடலின் பாகங்கள் போன்றவர்கள் என்றும் நமது உத்தம தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக கூறி இருக்கிறார்கள்.

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி)அறிவித்தார்.

(நூல்: புகாரி)

சகோதரத்துவம், ஒற்றுமை, உதவி, சேவை, அர்பணிப்பு போன்ற உன்னத நோக்கத்துடன் நமதூரைச்சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உழைப்பாலும், முயற்சியாலும் 03.12.1993 ஆண்டு நமதூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் இமாம் B.M. ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் துபாய் வந்தபோது நீடூர் நெய்வாசல் அஸோஸியேஸன் -துபாய் என்ற சங்கம் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த துபாய் சங்கத்தின் மூலமாக நமதூரில் உள்ள ஏழமையில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவிகளும், திருமணம் உதவிகளும், கல்வியை தொடர சிரமப்பட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளும், இலவச பாட நூல்களும், அமீரகத்தில் வாழும் சகோதரர்களிடமிருந்து பித்ரா தொகைகள் ஒன்றினைக்கப்பட்டு அதனை ஊரில் வாழும் ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கும் பகிந்தளிப்பதும், இன்னும் எத்தனை எத்தனையோ உதவிகளையும் இன்றளவும் சிறப்பாக செய்து வருவதை அனைவரும் அறிவோம்.

நூற்றுக்கணக்கான நமதூரைச்சார்ந்த சகோதரர்கள் அமீரகத்தில் வசித்துவருகிறோம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையில் மாதாந்திர ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதும், நமதூரின் முன்னேற்றத்திற்கு நம்மால் இயன்ற பணிகள் பற்றியும், ஏழ்மையில் வசிக்கும் நமதூரைச்சேர்ந்த சகோதர சகோதரிகளின் துயர் துடைக்க நம்மால் இயன்ற பணிகள் பற்றியும் ஆலோசனை செய்கிறோம். 

பல ஊர்களுக்கு சங்கமே இல்லாத சூழ்நிலையில், அல்லாஹ்வின் கிருபையால் நமதூருக்கு சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் மற்ற மற்ற ஊர் சகோதரர்கள் செய்யும் பணிகளை ஒப்பிடுகையில் நாம் செய்யும் சேவையின் தற்போதைய அளவானது சொற்பமாகவே தெரிகிறது.

அன்பார்ந்த சகோதரர்களே, நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம். பிறருக்கு தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு தர்மங்களையும், உதவிகளையும் செய்துவருகிறோம். அந்த உதவியின் தொடர்ச்சியாகவோ, தர்மத்தின் ஒரு பகுதியாகவோ நம் சங்கத்தின் சார்பாக வசூலிக்கப்படும் நபர் ஒன்றுக்கு மாதம் பத்து திர்ஹம் என்ற சந்தா தொகையினையும் வழங்கிடவும், அதன் மூலம் தேவையிலும் ஏழ்மையிலும் வாழும் நமதூரைச்சார்ந்த சகோதர சகோதரிகளின் துயர் துடைக்க முயற்சி செய்வோம். நாம் கொடுப்பதோ சுமார் பத்து திர்ஹம் மட்டுமே. ஆனால் பல்வேறு பத்துகள் இணையும் போது அதன் மதிப்பும் அதன் பலனும்  பெரியது என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

நமதூரில் எத்தனையோ சகோதர சகோதரிகளுக்கு கல்வி உதவி தேவைப்படுகிறது, மருத்துவ உதவி தேவைப்படுகிறது, கல்வி உதவி தேவைப்படுகிறது, அத்தியாவசிய தேவையான இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு, வேளை தேடி அமீரகம் வரும் சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு, அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்களுக்கு வட்டியில்லாத கடன் போன்ற தேவைகள் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கில் இங்கே இருந்து வருமானம் ஈட்டும் நாம் மேற்கூறிய தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சிறிய பங்களிப்பினையும் செய்வதற்கு முயற்சி செய்வோம். 

மாதாந்திர ஆலோசனைக்கூட்டதில் தவறாமல் கலந்துக்கொண்டு நல்ல ஆலோசனைகள் வழங்கி ஒற்றுமையுடன் நம் ஊரின், நம் இஸ்லாமிய சமுதாயத்தின் வளர்ச்சியில் நம்முடைய பங்களிப்பும் இருப்பதற்கு முயற்சி செய்வோம். இன்ஷா அல்லாஹ் நாம் செய்யும்  ஒவ்வொரு தர்மத்திற்கும், உதவிக்கும் நிச்சயமாக தக்க கூலியினை வழங்குவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் காத்திருக்கிறான்.


அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." 
(அல்குர் ஆன் 2:215)


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;
(அல் குர் ஆன் 2:267)


யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல் குர் ஆன்: 2:274)


நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். 
(அல் குர் ஆன் 3:92)